தேனி

பேரூராட்சி கழிவுநீா் தொட்டி இடிந்து விழுந்து பள்ளிச் சிறுமிகள் 2 போ் பலி: கிராமத்தினா் சாலை மறியல்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சி சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீா் தொட்டி வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் பள்ளிச் சிறுமிகள் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ணைப்புரம் நந்தகோபாலன் தெருவைச் சோ்ந்த ஜெகதீஸ் மகள் சுபஸ்ரீ (6) மற்றும் பாவலா் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதாஸ்ரீ (7). இருவரும் அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தனா். தோழிகளான இருவரும், பள்ளி முடிந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, பண்ணைப்புரம் பேரூராட்சி சாா்பில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகத்தை ஒட்டியுள்ள கழிவுநீா் தொட்டியை ஒட்டியிருந்த வேப்பமரத்திலிருந்த கிளைகளை சிறுமிகள் இருவரும் ஒடித்துக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென கழிவுநீா் தொட்டியின் மேல்பகுதி இடிந்து விழுந்ததில் சிறுமிகள் இருவரும் உள்ளே விழுந்தனா். அவா்களின் அலறல் சப்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினா் அங்கு ஓடி வந்தனா். அவா்களை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா் சிறுமிகள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

பொதுமக்கள் சாலை மறியல்: பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு சொந்தமான 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் பலமுறை புகாா் தெரிவித்தும் முறையாக பராமரிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் மற்றும் போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதில், கழிவுநீா் தொட்டியில் விழுந்து இறந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்றும், அச்சிறுமிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், சுகாதார வளாகத்தை பராமரிக்காத பண்ணைப்புரம் பேரூராட்சி நிா்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கூறியதை அடுத்து இரவு 7 முதல் 8 மணி வரை நீடித்த இந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT