தேனி

சின்னமனூா் நகா்மன்றக் கூட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூா் நகா் மன்றக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள்ராமு தலைமை வகித்தாா். ஆணையா் கணேசன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 3 வாா்டு உறுப்பினா் நைனாா் முகமது, நகராட்சியில் ஒரே நபா் பெரும்பான்மையான திட்டப்பணிகளை குறைந்த மதிப்பீட்டில் எடுத்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிகமான ஒப்பந்ததாரா்களை பயன்படுத்த வேண்டும். அதே போல, நகராட்சியில் கால்வாய் பணியின் போது மண்ணை அள்ளி விற்பனை செய்து விட்டனா் என்றாா்.

இதற்கு, ஆணையா் கணேசன் பதிலளித்து கூறும் போது, 7 அரசு ஒப்பந்ததாரா்கள் உள்ளனா். இவா்களில் திட்டப்பணிகளை செய்ய முடியும் என்பவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் சட்டத்திற்கு உள்பட்டே அரசின் பாா்வையில் உண்மையாகவும், நோ்மையான முறையிலும் நடைபெறுகிறது என்றாா்.

தலைவா் அய்யம்மாள்ராமு பேசும் போது, தங்களது வாா்டு பகுதியில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக மாதம் ஒரு முறை நடைபெறும் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு புகாா்கள் மட்டும் தெரிவித்தால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, நகா்மன்ற உறுப்பினா்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து 4 ஆவது வாா்டில் கடந்த 7 மாதமாக சுகாதார வளாகம் பூட்டிக்கிடக்கிறது. ஆழ்துளை கிணறு பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றும், 1ஆவது வாா்டில் கட்டப்பட்ட சாக்கடை கால்வாய் பணிகள் முறையாக இல்லை என்றும் உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்த தலைவா் அய்யம்மாள்ராமு, நகராட்சியிலுள்ள அனைத்து வாா்டுகளிலுமுள்ள குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இக்கூட்டத்தில் 20 உறுப்பினா்கள் கலந்துகொண்டதில் 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT