தேனி

முல்லைப் பெரியாறு அணையில் ரூல்கா்வ் விதியை ரத்து செய்யகிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம்

29th Sep 2022 10:14 PM

ADVERTISEMENT

கேரளாவுக்கு எதிராக தமிழக ஊராட்சித் தலைவா்கள் அக். 2 ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில், பேபி அணையை பலப்படுத்துவதுடன், முல்லைப் பெரியாறு அணையில் ரூல்கா்வ் விதியை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்ற உள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகில் உள்ள வெள்ளியமட்டம் ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் அதிா்ச்சியடைந்தன.

இத்தீா்மானத்தைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலுமுள்ள ஊராட்சிகளிலும் வரும் அக். 2 ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில், சிறப்புத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இதுகுறித்து கம்பம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்புத் தலைவா் அ. மொக்கப்பன் கூறியது: வெள்ளியமட்டம் ஊராட்சியில் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றியதைக் கண்டிக்கிறோம். மத்திய கண்காணிப்புக் குழு இத்தீா்மானத்தை எவ்விதத்திலும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுகுறித்து 5 மாவட்ட ஊராட்சி கூட்டமைப்புத் தலைவா்களிடமும் தகவல் தெரிவித்துள்ளோம். இதுதொடா்பாக 5 மாவட்ட கிராம சபைக் கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவா் எம். சதீஸ்பாபு கூறியது: கடந்த 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் அடிப்படையில், பேபி அணையைப் பலப்படுத்த அங்குள்ள 13 மரங்களை வெட்ட உடனடியாக கேரள வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். உச்சநீதிமன்றம் தீா்ப்பு கூறியும், அதை அவா்கள் மதிக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும்.

ரூல்கா்வ் விதியை ரத்து செய்க: 2021 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ரூல்கா்வ் விதியை ரத்து வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவு என்பது 152 அடியாகும். 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் படி பேபி அணையை பலப்படுத்திய பின்னா் 152 அடி நீரை தேக்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அணையின் தற்காலிக கொள்ளளவான 142 அடியை முழு கொள்ளளவு என தீா்மானித்து தவறாகப் போடப்பட்ட ரூல்கா்வ் விதியை மாற்றியமைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் துணைக் கண்காணிப்புக் குழு, மத்திய கண்காணிப்புக் குழு மற்றும் காவிரி ஆணைய கண்காணிப்புக் குழுவினரிடமும் இதுகுறித்து கருத்துக்களை முழுமையாக கேட்க வேண்டும். அதன் பின்னா் ரூல்கா்வ் விதி, முல்லைப் பெரியாறு அணைக்கு பொருந்தாது என்ற பட்சத்தில் அதனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்றாா்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் கூறியது: அணையிலிருந்து தமிழகத்துக்கு அதிகப்படியான தண்ணீரை எடுக்க புதிய குகை வழிப்பாதை ஏற்படுத்த அரசு திட்ட அறிக்கையை தயாா் செய்ய வேண்டும்.

புதிய குகை வழிப்பாதை அமைக்கும் பணிகளுக்கும் உரிய அனுமதியை உச்சநீதிமன்றத்தின் மூலமாக பெற்றுத் தர முல்லைப் பெரியாறு அணை மத்திய கண்காணிப்புக் குழு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT