தேனி

முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட ஊராட்சி தீா்மானம்: தமிழக விவசாயிகள் கண்டனம்

26th Sep 2022 11:23 PM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு 5 மாவட்ட விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வெள்ளியமட்டம் ஊராட்சித் தலைவியாக இருப்பவா் இந்துபிஜு. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஊராட்சிக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீா்மானம் கேரள முதல்வருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் கண்டனம்: இதுகுறித்து பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் கூறியது: முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தீா்மானம் நிறைவேற்ற உள்ளன. முதலில் வெள்ளியமட்டம் ஊராட்சி இத்தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை பயன்படுத்தும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள் புதிய அணை கட்டக் கூடாது என்று தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். வரும் அக். 2 ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றி பிரதமா், தமிழக, கேரள முதல்வா்களுக்கு அனுப்ப வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கு காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT