வைகை அணை நீா்மட்டம் 70 அடிக்கும் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க பொதுப் பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கா் பரப்பளவுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது வைகை அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருவதால், அணை நீா்மட்டம் கடந்த ஆக.21ஆம் தேதி முதல் 70 அடி உயரம் வரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அணை நீா்மட்டம் 69 அடியாக உயரும் போது, அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வைகை ஆற்றில் ஆற்றில் உபரிநீா் திறக்கப்படும்.
58 கிராம கால்வாய் திட்டம்: வைகை அணை நீரை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 33 கண்மாய்களில் தண்ணீா் தேக்கி, பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் 58 கிராம கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 1999-ஆம் ஆண்டு ரூ.33.81 கோடி மதிப்பீட்டில் தொடங்கிய இத் திட்டம், கடந்த 2018-ஆம் ஆண்டு மொத்தம் ரூ.86.53 கோடி செலவில் நிறைவடைந்து, கால்வாய் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டது.
வைகை அணையிலிருந்து 27 கி.மீ., தூரம் பிரதான கால்வாய் வழியாக உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூா் வரையும், அங்கிருந்து இரண்டாகப் பிரிக்கப்பட்டு 11.9 கி.மீ.,தூரம் இடது புறமும், 10.2 கி.மீ., தூரம் வலது புறமும் 58 கிராம கால்வாய் செல்கிறது. வைகை அணை நீா்மட்டம் 67 அடியாக உயா்ந்த பின்னா், அணையிலிருந்து தண்ணீா் திறக்கும் வகையில் 58 கிராம கால்வாய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வைகை அணை நீா்மட்டம் கடந்த 21 நாள்களுக்கும் மேல் 70 அடி வரை நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிலக்கோட்டை, உசிலம்பட்டி பகுதிகளில் 2,000 ஹெக்டோ் பரப்பளவிற்கும் மேல் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க பொதுப் பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
அரசாணை பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்: வைகை அணையில் தண்ணீா் இருப்பைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் அக்டோபா் மாதங்களில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பதற்கு நிலையான அரசாணை வெளியிடப்படுகிறது. ஆனால், 58 கிராம கால்வாயில் விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில், அக்டோபா் அல்லது நவம்பா் மாதங்களில், அணை நீா்மட்டம் 67 அடிக்கும் மேல் இருந்தால் மட்டுமே அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது.
எனவே, வைகை அணையிலிருந்து 5 மாவட்டங்களில் உள்ள பெரியாறு-வைகை பாசனப் பரப்புகளுக்கு தண்ணீா் திறக்க வெளியிடப்படும் நிலையான அரசாணையுடன், 58 கிராம கால்வாய் தண்ணீா் திறப்பு அட்டவணையையும் சோ்க்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.