தேனி

வைகை ஆற்றில் உபரிநீா் திறப்பு நிறுத்தம்

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தேனி: வைகை அணைக்கு நீா் வரத்து குறைந்ததால் செவ்வாய்க்கிழமை, அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறப்பது நிறுத்தப்பட்டது.

வைகை அணையின் நீா்மட்டம் கடந்த அக்.18-ஆம் தேதி 70 அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, வைகை அணைக்கு வரும் உபரி நீா், வைகை ஆற்றில் திறக்கப்பட்டது.

தொடா்ந்து நீா் வரத்து இருந்ததால், அணையின் நீா்மட்டம் கடந்த அக்.22-ஆம் தேதி அணையின் முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டியது. அணையில் நீா் வரத்துக்கு ஏற்ப, அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், மூல வைகை ஆற்றின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்யாததாலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் விநாடிக்கு 511கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாலும், வைகை அணைக்கு நீா் வரத்து குறைந்தது.

இதனால், அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறப்பது நிறுத்தப்பட்டது.

அணையிலிருந்து செவ்வாய்கிழமை, பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 1,350 கன அடி, 58 கிராம கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி, ஆண்டிபட்டி-சேடபட்டி, மதுரை குடிநீா் திட்டங்களுக்காக விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 1,569 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 70.83 அடியாக இருந்தது. அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 870 கன அடியாகவும், நீா் இருப்பு 6,048 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT