தேனி

மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகள் அரசு குடியிருப்பில் குடியேறி போராட்டம்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி, குட்செட் தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகள் செவ்வாய்க்கிழமை, வடவீரநாயக்கன்பட்டி அரசு நகா்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி ரயில் நிலையம் அருகே குட்செட் தெருவில் உள்ள ரயில்வே புறம் போக்கு நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், குடிசை வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனா்.

இந்தக் குடிசைகளை அகற்றுமாறு ரயில்வே நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தங்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு குடிசைவாசிகள் வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து, அவா்களுக்கு நகா்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெறுவதற்கு பயனாளியின் பங்களிப்பாக ரூ. 2.50 லட்சம் வரை செலுத்த முடியாததால், குட்செட் தெரு குடிசைவாசிகள் வீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், தேனியில் திங்கள்கிழமை இரவு பெய்த கன மழையால் குட்செட் தெருவில் மழை நீா் புகுந்து வீடுகள் சேதமடைந்தன. சிலரது வீட்டில் இருந்த பாத்திரங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை குட்செட் தெருவைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அமமுக நகரச் செயலா் காசிமாயன் தலைமையில், தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் உள்ள நகா்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகளில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற தேனி வட்டாட்சியா் சரவணபாபு, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தங்களிடம் பயனாளியின் பங்களிப்பாக மாதத் தவணை முறையில் பணம் பெற்றுக் கொண்டு வீடு வழங்குமாறு குடிசைவாசிகள் வலியுறுத்தினா். பின்னா், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெறுவதற்கு பங்களிப்புத் தொகை செலுத்த வங்கிக் கடன் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT