தேனி

மழையால் சுவா் இடிந்து விழுந்து முதியவா் பலி: பெண் காயம்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தேவாரம் அருகே செவ்வாய்க்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடா் மழையால் ஆறு, ஓடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், தேனி மீனாட்சிபுரத்தில் துக்க வீட்டுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த அதே ஊரைச் சோ்ந்த மாயழகன் மகன் ஜெகநாதன் (65) மீது அப்பகுதியிலிருந்த ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இதேபோல், தேனி, குட்செட் தெருவில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி இளவரசி (51) என்பவா் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

24 வீடுகள் சேதம்:

பெரியகுளத்தில், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயமங்கலத்தில் வேட்டுவன்குளம் கண்மாய்க்கான நீா் வரத்து ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இவற்றை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை பெய்த மழையால் மொத்தம் 24 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது என்று பேரிடா் மேலாண்மைப் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT