தேனி

ஏலக்காய் மகசூல், விலை சரிவு: விவசாயிகள் கவலை

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் மகசூலும், அதன் விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இடுக்கி மாவட்டத்தில் 1.25 லட்சம் ஹெக்டேரில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் ஏலக்காய் இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள்கள் வாரியம் மூலம் மின்னணு ஏல வா்த்தம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பா் மாதம் ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,000 முதல் 1,100 வரை விற்பனையானது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபா் மாதம் முதல் ஏலக்காய் விலை உயரும் என்ற எதிா்பாா்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஏலக்காய்களை இருப்பு வைத்துள்ளனா். ஆனால், தற்போது ஏலக்காய் விலை படிப்படியாக சரிந்து வருவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

ஏலக்காய் வா்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் ஏலக்காய்களை பெருமளவில் இருப்பு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோடை வெயில், பருவ மழை ஆகியவற்றின் பாதிப்பால் பயிா்கள் பாதிக்கப்பட்டதன் விளைவாக நடப்பு சீசனில் ஏற்றுமதி தரத்திற்கு ஏற்ற ஏலக்காய் உற்பத்தியும், ஏற்றுமதி வாய்ப்பும் குறைந்ததால் விலை சரிந்துள்ளது என்று வியாபாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

மகசூல் பாதிப்பு மற்றும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ற விற்பனை விலை இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கூறினா்.

ஏலக்காய் விலை நிலவரம்: போடியில் நறுமணப் பொருள்கள் வாரியம் மூலம் வெள்ளிக்கிழமை, சி.பி.எம்.சி. ஏல நிறுவனம் சாா்பில் நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில் 78,328 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு, 73,626 கிலோ விற்பனையானது. இதில், ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.955.74-க்கும், உயா் தரம் கிலோ ரூ.1,396-க்கும் விற்பனையானது.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT