தேனி

போடி-தேனி அகல ரயில் பாதைப் பணிகள் தீவிரம்

7th Oct 2022 11:14 PM

ADVERTISEMENT

போடி- தேனி இடையே அகல ரயில்பாதைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரையிலிருந்து தேனி வரை அகல ரயில்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கியது. அதைத் தொடா்ந்து தேனி முதல் போடி வரையிலான அகல ரயில்பாதை பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. 15 கி.மீ. தூரம் கொண்ட இப்பணிகளில் தற்போது 8 கி.மீ. தூரம் வரை ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதற்காக 3 இடங்களில் பெரிய பாலங்களும், 30 இடங்களில் சிறிய அளவிலான பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

அணைக்கரைப்பட்டி, சன்னாசிபுரம், போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனி ஆகிய ரயில் பாதை செல்லுமிடங்களில் பொதுமக்கள் செல்வதற்காக சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போடி- மூணாறு சாலையில் இரட்டை வாய்க்கால் பகுதியில் ரயில்பாதையை கடப்பதற்காக மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. போடி ரயில் நிலையத்திலிருந்து, சந்தன மாரியம்மன் கோயில் சாலை வரை நவீன வசதிகளுடன் நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

நீண்டதூர ரயில்கள் இயக்கக் கோரிக்கை

இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரியில் போடி- மதுரை வரையிலான அகலப் பாதையில் ரயில் சேவை தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் போடி பகுதியிலிருந்து ஏலக்காய், மிளகு, காப்பி, இலவம் போன்றவற்றை பெரிய நகரங்களுக்கு அனுப்பும் வகையில், சென்னை, பெங்களூரு, புதுதில்லி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு ரயில்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags : போடி
ADVERTISEMENT
ADVERTISEMENT