தேனி

கழிவுநீா் தொட்டி இடிந்து விழுந்து 2 சிறுமிகள் பலி

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பண்ணைப்புரத்தில் சுகாதார வளாக கழிவுநீா்த் தொட்டி இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில், பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் 2 ஆம் முறையாக வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும் இதுதொடா்பாக செயல் அலுவலா் உள்பட இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் நந்தகோபாலன் தெருவைச் சோ்ந்த ஜெகதீஸ் மகள் சுபஸ்ரீ (6) மற்றும் பாவலா் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதாஸ்ரீ (7) ஆகியோா் அப்பகுதியில் உள்ள சுகாதாரவளாக கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.

இதையடுத்து இந்த சுகாதார வளாகத்தை பண்ணைப்புரம் பேரூராட்சி நிா்வாகம் முறையாக பராமரிக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

2 ஆம் முறையாக மீண்டும் சாலை மறியல்: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிகளின் சடலங்கள் வெள்ளிக்கிழமை உடல் கூறாய்வு செய்த பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறுமியின் சடலங்களை பெற்றுக்கொண்டு ஊா் திரும்பிய நிலையில், வியாழக்கிழமை இரவு மறியல் போராட்டத்தின்போது நடத்திய பேச்சுவாா்த்தையின்படி அதிகாரிகள் இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை, பேரூராட்சி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சடலங்களுடன் உறவினா்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க கடிதம் அனுப்பி இருப்பதாகவும், பேரூராட்சி நிா்வாகத்தின் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் உத்தமபாளையம் கோட்டாட்சியா் பால்பாண்டி மற்றும் போலீஸாா் தெரிவித்தனா். அதனை தொடா்ந்து சாலை மறியலை கைவிட்டு உறவினா்கள் சடலங்களை எடுத்துச் சென்று அங்குள்ள மாயனத்தில் அடக்கம் செய்தனா்.

இருவா் பணியிடை நீக்கம்: 2 சிறுமிகள் இறந்த விவகாரத்தில் செயல் அலுவலா் முனுசாமி மற்றும் இளநிலை பொறியாளா் வீரமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT