தேனி

கேரள அரசின் நில அளவைப் பணியால் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பறிபோகும் அபாயம்!

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் தொடா்ந்து இடையூறு செய்து வரும் நிலையில், தற்போது தமிழக எல்லையோரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களை அபகரிக்க, டிஜிட்டல் நில அளவைப் பணி மேற்கொண்டு வருகிறது.

தமிழக - கேரள எல்லையில் உள்ள நிலங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணியை கேரள அரசு கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இதுகுறித்து

தமிழக அரசுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடா்பாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனை கடந்த 9-ஆம் தேதி, பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் சந்தித்து மனு கொடுத்து விளக்கம் அளித்தனா்.

ஆனால், கேரள அரசு கடந்த 28 நாள்களுக்கும் மேலாக இந்த நில அளவைப் பணி மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணி குறிப்பாக மலையாளத் தமிழா்களு மட்டுமல்லாமல், தமிழக எல்லைக்கும் எதிராகவே உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பெரியாறு - வைகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் இ. சலேத்து கூறியதாவது:

கேரள அரசின் இந்த நில அளவைப் பணி, தேனி மாவட்டம், தேவாரம் கிராமத்தை ஒட்டி இருக்கும் சாக்கலூத்துமெட்டு பகுதிக்குள் வருகிறது. ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேனி மாவட்ட வனத் துறை அமைதி காக்கிறது.

ஜமீன் முறை ஒழிப்புக்குப் பிறகு, அனைத்து நிலங்களும் வனத் துறைக்கு ஒரு பகுதியாகவும், வருவாய்த் துறைக்கு ஒரு பகுதியாகவும் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டு துறைகளுமே அந்த நிலங்களை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஹெக்டோ் நிலங்களை கேரள அரசு இரட்டைப் பதிவு மூலம் கையகப்படுத்தி வைத்துள்ளது. எனவே, ஜமீன் பட்டா அடிப்படையிலேயே தமிழக - கேரள எல்லை அளவீடு செய்யப்பட வேண்டும்.

மறு நிலஅளவைப் பணி கேரள அரசு தொடங்கி இன்றுடன் 28 நாள்களாகிறது.

ஆனால், இதுவரை இரு மாநில அதிகாரிகளைக் கொண்ட கூட்டு கமிட்டி அமைக்கப்படவில்லை. எனவே, இந்த எல்லை அளவீடு முறைகேடாக இருந்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா் அவா்.

கடந்த 2017-இல் இரு மாநிலங்களும் நடத்திய கூட்டு நில அளவைப் பணியின் போது, தமிழகத்துக்கு சொந்த நிலங்களை கையகப்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தியது. இதேபோல, தற்போது டிஜிட்டல் நில அளவைப் பணி விவகாரத்திலும் அமைதி காப்பதும் பெரும் ஏமாற்றமாக உள்ளது. அண்டை மாநிலம் என்றாலும், நமக்கு சொந்தமான உரிமையை விட்டுக் கொடுக்க இயலாது என்கின்றனா் தேனி மாவட்ட மக்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT