தேனி

போடி அருகே 20 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்:  கிராம மக்கள் சாலை மறியல்

28th Nov 2022 12:06 PM

ADVERTISEMENT

போடி அருகே 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், போடி அருகே, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சி கிராமம் டி.புதுக்கோட்டை. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். நியூட்ரினோ மலை கிராமமான இங்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து திங்கள்கிழமை டி.புதுக்கோட்டை கிராம மக்கள் சாலையில் கற்களை போட்டும், கயிறு கட்டியும் சாலையில் அமர்ந்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்தனர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையும் படிக்க- தங்கம் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை!

ADVERTISEMENT

ஒரு வாரத்தில் குடிநீர் பிரச்னை சரி செய்யப்படும் என தெரிவித்தும் கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிடவில்லை. இதனையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தினர். இதனையடுத்து ஒரு வாரத்திற்குள் குடிநீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறி கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : protest theni
ADVERTISEMENT
ADVERTISEMENT