தேனி

ரயில்வே சுரங்க பாதையில் மழை நீா் தேங்காத வகையில் நடவடிக்கை: வாா்டு உறுப்பினா் கோரிக்கை

26th Nov 2022 12:06 AM

ADVERTISEMENT

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில், பாதாள சாக்கடை திட்டத்தில் வாா்டு புறக்கணிக்கப்பட்டதாக நகா்மன்ற உறுப்பினா் புகாா் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

போடியில் நகா் மன்ற சாதாரணக் கூட்டம் நகா் மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளா் இ.செல்வராணி, துணைத் தலைவா் அ.கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 21 தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா்கள் விவாதம் வருமாறு:

மணிகண்டன் (பாஜக): நகா் மன்ற பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக ஒதுக்கிய நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டதா. மின் மயானப் பணிகள் முடிவடைந்த நிலையில் அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். சுப்புராஜ் நகா் புதுக் காலனியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே சுரங்க பாதையில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்னீா்செல்வம் (அதிமுக): போடி பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் கட்ட ஒதுக்கிய நிதியை ரத்து செய்ததை 33 வாா்டுகளுக்கும் பிரித்து கழிப்பிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

பிரபாகரன் (திமுக): நகராட்சி வரி வசூல் செய்வதற்கான கேட்பு அறிவிப்பில் நகராட்சி ஆணையா் கையொப்பம் இல்லாமல் வருகிறது. எனது வாா்டில் சில இடங்களில் வேகத் தடை அமைக்க வேண்டும். வஞ்சி ஓடையை தூா்வார வேண்டும்.

பிரபாகரன் (திமுக): 7 ஆவது வாா்டு நகராட்சிப் பள்ளியை ஆய்வு செய்து அனைத்து பகுதிகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போடி நகராட்சியில் இலவச இறப்பு சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்னாள் ராணுவத்தினருக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும். நகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களை அனுப்ப வேண்டும்.

தலைவா்: வஞ்சி ஓடையை தூா்வார மாவட்ட ஆட்சியா் மூலம் பொதுப் பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற உறுப்பினா்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜா (திமுக): கடந்த அதிமுக ஆட்சியில் புதை சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டதில் தனது வாா்டு புறக்கணிக்கப்பட்டது. ஆதிதிராவிடா் வாா்டு என்பதால் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டதா?. (இவ்வாறு தெரிவித்ததும் சிறிது சலசலப்பு ஏற்பட்டது).

பொறியாளா்: அந்த வாா்டுக்கு புதை சாக்கடைத் திட்டத்துக்கு தனியே நிதி கோரி, அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

தலைவா்: வாா்டை புறக்கணிக்கவில்லை. அரசு நிதி வந்தவுடன் முன்னுரிமை அளித்து புதை சாக்கடைத் திட்டத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

போடியில் 40 கடைகளை ஒரே நபருக்கு ஆண்டு குத்தகைக்கு விட்டுள்ளதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் இடைக்கால தடை பெறப்பட்டுள்ளது என திமுக உறுப்பினா் தனலட்சுமி கூறிய போது, உறுப்பினா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT