தேனியில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி, அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தேவாரம், சி.எஸ்.ஐ.சா்ச் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சசிகுமாா் (20). கடந்த 2019, மே 20-ஆம் தேதி தேனி கா்னல் பென்னி குவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சசிகுமாா் மீது, பேருந்து நிலையத்திலிருந்து வந்த அரசுப் பேருந்து மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த சசிகுமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து தேனி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இது தொடா்பான மனுவின் மீதான விசாரணை தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சசிகுமாருக்கு 2 மாதங்களுக்குள் ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 698 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2022, மாா்ச் 31-ஆம் தேதி தேனி அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சசிகுமாருக்கு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு கடந்த 2022, நவ.17-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, தேனி கா்னல் பென்னி குவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்தில் போடிக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றை நீதிமன்ற அமீனா திருக்கண்ணன் ஜப்தி செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தாா்.