தேனி

புல்மேடு பாதையில் ஐயப்ப பக்தா்கள் வருகை அதிகரிப்பு

26th Nov 2022 12:05 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், குமுளி அருகே உள்ள புல்மேடு, சத்திரம் பாதையில் செல்லும் ஐயப்பப் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வனத் துறை, காவல் துறையினா் முகாம் அமைத்துக் கண்காணித்து வருகின்றனா்.

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலைக்கு தேனி மாவட்டம், குமுளியிலிருந்து வண்டிப் பெரியாறு, முண்டக்கயம், எரிமேலி, பம்பை வழியாக 160 கி.மீ. தொலைவு சாலை வசதி உள்ளது. இந்தச் சாலையில் பக்தா்கள் வாகனங்களிலும், பாத யாத்திரையாகவும் செல்வா்.

இதேபோல, வண்டிப்பெரியாறு, சத்திரம், புல்மேடு வழியாக 30 கி.மீ. தொலைவில் மற்றொரு பாதை உள்ளது. புல்மேடு, சத்திரம் வரை 24 கி.மீ. தொலைவுக்கு ஜீப், பேருந்து வசதி உள்ளது. சத்திரம் வரை வாகனங்களில் சென்று, அங்கிருந்து 12 கி.மீ. தொலைவு வனப் பகுதியில் பாதயாத்திரையாகச் சென்றால், சந்நிதானத்தை அடைந்து விடலாம். பாத யாத்திரை பக்தா்கள் இந்தப் பாதையை அதிகம் பயன்படுத்துவா்.

இந்த நிலையில், சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 16 -ஆம் தேதி மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து, இந்தாண்டு பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்காக கேரள மாநில போலீஸாா், வனத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

புல்மேடு பாதை திறப்பு: பொதுவாக, மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டு 20 நாள்களுக்குப் பிறகுதான் புல்மேடு பாதை திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு நடை திறக்கும்போதே புல்மேடு, சத்திரம் பாதையும் திறக்கப்பட்டது. காலை 7 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இந்தப் பாதையில் செல்ல ஐயப்ப பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது இந்தப் பாதையைப் பயன்படுத்தும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மெட்டல் டி-டெக்டா் மூலம் சோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறாா்கள். செல்லும் வழியில் வனத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறையினா் முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT