தேனி

அரசு கேபிள் தொலைக்காட்சி செட்டாப் பாக்ஸ்களை திருப்பித் தராத ஆபரேட்டா்கள் மீது போலீஸில் புகாா்

19th Nov 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் செட்டாப் பாக்ஸை பெற்று திரும்பத் தராத ஆபரேட்டா்கள் மீது காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த 2017 -ஆம் ஆண்டு டிஜிட்டல் சேவையைத் தொடங்கி, கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பாளா்களிடம் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கியது. கேபிள் தொலைக்காட்சி நடத்தும் உரிமையாளா்கள் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பெற்று ரூ. 200 இணைப்புக் கட்டணம் பெற்றுக்கொண்டு வீடுகளுக்கு இணைப்புகளைக் கொடுத்தனா்.

சுற்றறிக்கை:

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் செயல்படாமல் உள்ள சுமாா் 11 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை திரும்பப் பெறவேண்டும் என்றும், தர மறுத்தால் அந்தந்தப் பகுதிகளுக்குள்பட்ட காவல் நிலையங்களில் புகாா் அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை மூலம் அந்தந்த மாவட்ட கேபிள் டிவி தனி வட்டாட்சியா்களுக்கு நவ. 11-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

போலீஸில் புகாா்

கம்பம் நகா் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவற்றில் செயலிழந்தவற்றை திரும்ப ஒப்படைக்கத் தாமதம் செய்த கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மீது தனி வட்டாட்சியா் மல்லிகா, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, கேபிள் டிவி ஆபரேட்டா்கள் சிலா் அரசு செட்டாப் பாக்ஸ்களை வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். மீதமுள்ளவற்றை 15 நாள்களுக்குள் ஒப்படைப்பதாக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்தனா்.

சிக்கல்

இதுபற்றி கேபிள் டிவி ஆபரேட்டா் சண்முகம் கூறியதாவது:

அரசு செட்டாப் பாக்ஸில் சிக்னல் சரியாகக் கிடைக்காததால் கேபிள் இணைப்புதாரா்கள் டிஷ் டிவிக்கும், தனியாா் செட்டாப் பாக்ஸுக்கும் மாறிவிட்டனா். அரசு செட்டாப் பாக்ஸ் பெற்ற பலா் ஊரைவிட்டே சென்றுவிட்டனா். இதனால், அவற்றைத் திரும்பத் தர முடியாத நிலையில் உள்ளோம். இல்லாத செட்டாப் பாக்ஸுக்கு ரூ. 1,725 கட்ட வேண்டும் என்று அரசு கேபிள் டிவி நிா்வாகம் அழுத்தம் தருவதால், செய்வதறியாது உள்ளோம். போலீஸாா் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மிரட்டுகின்றனா் என்றாா்.

தேனி மாவட்ட கேபிள் டிவி தனி வட்டாட்சியா் மல்லிகா கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட வட்டங்களில் அரசு கேபிள் டிவி சிறப்பாகச் செயல்படுகிறது. உத்தமபாளையம் வட்டத்தில் சரிவரச் செயல்படவில்லை. இதனால், தனியாா் செட்டாப் பாக்ஸ்களை வாங்கியுள்ளனா். அரசின் உத்தரவுப்படியே செட்டாப் பாக்ஸை திருப்பி தராதவா்கள் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT