உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நெடுஞ்சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக சுருளித்தீா்த்தம் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. அப்பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெல், வாழை, தென்னை, திராட்சை, பீட்ருட் உள்ளிட்ட பொருள்களை இச்சாலையில் சரக்கு வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனா்.
வாகனப் போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் கோகிலாபுரத்தில் பல மாதங்களாக தனி நபா்கள் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை குவித்து வைத்துள்ளனா். ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் சாலையில் சிதறிக்கிடப்பதால் இரு சக்கரவாகனங்களில் செல்பவா்கள் மற்றும் குவியல் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக குவிக்கப்பட்டிருக்கும் கட்டுமானப் பொருள்களை சம்மந்தப்பட்ட துறையினா் அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.