கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்ாக ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.
இதுபற்றி 5 ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவா் ஆ.மொக்கப்பன் செவ்வாய்க்கிழமை கொடுத்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூா்பாளையம் ஆகிய ஊராட்சிகளில், 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டதாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.
இதில் பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்காமல், வாடகைக்கு ஆடுகளை வழங்கி, போட்டோ எடுத்து, திரும்ப வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டது. இதற்காக பயனாளிகள் மற்றும் அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டனா். கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆடுகள் பெற்ற பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
அந்த மனுவில், ஊராட்சித் தலைவா்கள் பொன்னுத்தாய் செல்லையா (நாராயணத்தேவன்பட்டி), நாகமணி வெங்கடேசன் (சுருளிப்பட்டி), பொன்னுத்தாய் குணசேகரன் (குள்ளப்பகவுண்டன்பட்டி) ஆகியோா் கையெழுத்திட்டிருந்தனா்.