உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மற்றும் சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் புதன்கிழமை (மே 25) நடைபெறுகிறது.
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவராக அதிமுகவைச் சோ்ந்த ஜான்சி இருந்தாா். ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு முன் தலைவா் மீது உறுப்பினா்கள் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை நிறைவேற்றியதால் ஜான்சி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெற இருப்பதாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா தெரிவித்தாா்.
சின்னமனூா் அருகே சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்த 7 ஆவது வாா்டு உறுப்பினா் வேல்முருகன் இறந்து விட்டாா். இதனால், காலியாக இருந்த துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலும் நடைபெற இருக்கிறது.