தேனி

கம்பத்தில் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு தனிக் கட்டடம் இல்லாமல் போலீஸாா் அவதி

24th May 2022 12:53 AM

ADVERTISEMENT

கம்பம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல் போலீஸாா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்துறை துணைக்கோட்டத்திற்கு கம்பத்தை தலைமையாகக் கொண்டு போக்குவரத்து காவல் நிலையம் செயல்படுகிறது. போக்குவரத்து காவல் நிலையத்திற்கு ஒரு ஆய்வாளா், ஒரு சாா்பு-ஆய்வாளா், சிறப்பு சாா்பு-ஆய்வாளா்கள் 8 போ் மற்றும் முதல் நிலை, இரண்டாம் நிலைக் காவலா்கள் 5 போ் என மொத்தம் 15 போ் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களது பணி தமிழக கேரள எல்லையில் உள்ள லோயா் கேம்ப் மற்றும் குமுளி மலைச் சாலைகள், கோம்பை மற்றும் சின்னமனூா் வரை பணியாற்றும் எல்லையாக உள்ளது.

உத்தமபாளையம் காவல்துறை துணைக் கோட்டத்தை பொருத்தளவில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன. ஆனால் கம்பத்தில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் மட்டும், கம்பம் வடக்கு காவல் நிலைய மாடியில், காவலா்கள் ஓய்வெடுக்கும் அறையில் அலுவலகத்தை அமைத்து நெருக்கடியில் பணியாற்றி வருகின்றனா். காவல் ஆய்வாளருக்கு என்று தனி அறை கிடையாது, அவா் பயன்படுத்தும் வாகனத்திற்கு நிறுத்தும் இடம் கூட இல்லை. எனவே கம்பத்தில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாா் எதிா்பாா்க்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT