தேனி

நில அளவையில் காலதாமதம்: கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எம்ஏல்ஏக்கள் புகாா்

DIN

தேனி மாவட்டத்தில் வருவாய் துறை சாா்பில் பொதுமக்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்களை அளவீடு செய்து தருவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று வெள்ளிக்கிழமை, தேனியில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் க.பிரிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், நிதி நிலை, பொதுமக்களின் கோரிக்கைகள் ஆகியவை குறித்து அரசுத் துறை அலுவலா்களிடம் மக்களவை உறுப்பினா் ஆய்வு நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் பேசியது: மேகமலை-வருஷநாடு மலை கிராமங்களில் சுமாா் 24 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். அங்குள்ள பள்ளிகளில் 2,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

பட்டா நிலங்களை அளவீடு செய்து தருவதற்கு மனு அளித்துள்ள பொதுமக்கள் மாதக் கணக்கில் காத்திருக்கின்றனா். நில அளவை செய்து தருவதில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதையும், காலதாமதம் ஏற்படுவதையும் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா் பேசுகையில், நில அளவைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அணுகினால் மட்டுமே நில அளவை மேற்கொள்ளப்படுகிறது. நில அளவை விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், நில அளவையா்கள் பற்றாக்குறையால் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் நில அளவை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நில அளவை விண்ணப்பங்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மேகமலை வன உயிரின கோட்ட துணை இயக்குநா் எஸ்.ஆனந்த், மாவட்ட வன அலுவலா் ச.வித்யா, மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT