கூடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்த இடத்தை திங்கள்கிழமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
கோம்பையைச் சோ்ந்தவா் ரவி மனைவி மயில் (47). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் கூடலூா் பகுதியில் சுற்றித் திரிந்தாா். இந்த நிலையில், கூடலூா் கூலிக்காரன் பாலம் அருகே உள்ள ஓடையில் மயில் பலத்த காயங்களுடன், உடலில் ஆடையின்றி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது குறித்து பொதுமக்கள் கூடலூா் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். காவல் துறை தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டு, விசாரணை நடத்தினாா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை போலீஸாா் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனா்.