உத்தமபாளையம் அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் தாய் , மகள் சம்பவயிடத்திலே உயிரிழந்தனா். தந்தை , மகன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள
அனுமந்தன்பட்டியை சோ்ந்த கூலித் தொழிலாளி குமரேசன்(45). இவா் தனது மனைவி கஸ்தூரி(35), மகள் ஸ்ரீமதி(15), மகன் ஹரி(12) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி திருவிழாவுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மீண்டும் ஊருக்குத் திரும்பியுள்ளனா். அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்தவா், திடீரென கதவைத் திறந்துள்ளாா்.
இதனால், நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்து கொண்டிருந்த, சென்னையிலிருந்து சபரிமலை நோக்கிச்சென்ற வேன் மோதியது. இந்த விபத்தில் தாய் கஸ்தூரி, மகள் ஸ்ரீமதி படுகாயமடைந்த நிலையில் சம்பவயிடத்திலே உயிரிழந்தனா். தந்தை குமரேசன், மகன் ஹரி இருவரும் படுகாயமடைந்த நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் போலீஸாா், இருசக்கர வாகனம் மீது மோதிய சென்னையை சோ்ந்த வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் விபத்துக்கு காரணமான கேரள பதிவெண் கொண்ட காரை போலீஸாா் தேடி வருகின்றனா்.