தேனி

பொதுச் சொத்துக்களை உருவாக்க கிராம மக்கள் முன்வர வேண்டும்: ஆட்சியா்

1st May 2022 11:44 PM

ADVERTISEMENT

 

ஊராட்சிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் அரசு செயல்படுத்தும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொது சொத்துக்களை உருவாக்கிக் கொள்ள கிராம மக்கள் முன் வர வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை, தேனி அருகே அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தேனி ஒன்றியம், அம்பாசமுத்திரம் ஊராட்சியில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவா் பி.சுமித்திரா தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: அம்பாசமுத்திரம் ஊராட்சியில் 2022-23-ஆம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக் கழிப்பறைகள், அங்கன்வாடி மையம், பொது சுகாதார வளாகம் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிா்வாகம் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

நெகழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்க வேண்டும். இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் மே 8-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ஊராட்சிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் அரசு செயல்படுத்தும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், பொதுச் சொத்துக்களை உருவாக்கிக் கொள்ள கிராம மக்கள் முன் வர வேண்டும். இத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் பணிக்கான மொத்த மதிப்பீட்டில், 3-இல் ஒரு பங்குத் தொகையை பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டும். ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இத் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள, மொத்த மதிப்பீட்டில் 5-இல் ஒரு பங்கு தொகையை பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டும் என்றாா். பின்னா், ஆட்சியா் தலைமையில் கிராம மக்கள் வாக்காளா் உறுதி மொழியேற்றனா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.தண்டபாணி, வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநா் எம்.பாண்டி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அண்ணாதுரை, தேனி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எம்.சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT