தேனி

இளையான்குடி நகருக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்கக்கோரி நாளை கடையடைப்பு போராட்டம்

14th Mar 2022 02:02 PM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி நாளை (மார்ச் 15) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 

இளையான்குடி நகருக்கு மத்தியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இடப்பற்றாக்குறை எனக் காரணம் காட்டி நகருக்கு வெளியே, இளையான்குடி நகருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாவார்கள். வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்காமல் தற்போதுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத அரசு மருத்துவமனை கட்டிடத்தை அகற்றி விட்டு தற்போதுள்ள பேருந்து நிலையத்தை  விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி மார்ச் 15-ஆம் தேதி இளையான்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தகர்கள் அறிவித்திருந்தனர். 

இந்த போராட்டத்திற்கு இளையான்குடியைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி  உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

இளையான்குடி பஸ் நிலையம்.

இதற்கிடையில் கடையடைப்பு போராட்டத்தை கைவிட செய்யும் நோக்கில் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் வியாபாரிகளின் கோரிக்கை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது இளையான்குடி நகருக்குள் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வாய்ப்பில்லை. ஊருக்கு  வெளியில் தான் பேருந்து நிலையம் அமைப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே வியாபாரிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது. 

வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்து விட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி இளையான்குடி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இளையான்குடி நகரில் நாளை (மார்ச் 15) செவ்வாய்க்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு வியாபாரிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT