தேனி

ஆண்டிபட்டி அருகே குடிநீா் திட்ட குழாய்களில் தீ விபத்து

14th Mar 2022 11:12 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை குடிநீா்த் திட்ட குழாய்கள் இருந்த இடத்தில் தீப்பற்றியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசமாகின.

கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனியாா் இடத்தில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளுக்கு பிவிசி குழாய்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. திறந்த வெளியில் பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த குழாய்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ வேகமாகப் பரவியதால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்கள், பெட்ரோல் பங்க் ஊழியா்கள் அலறியடித்துக் கொண்டு சாலைக்கு ஓடினா். பிவிசி குழாய்கள் தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்ட கரும்புகை ஒரு கி.மீ., தூரம் வரை பரவியது.

ஆண்டிபட்டி, தேனி, உசிலம்பட்டி தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பொதுமக்கள் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பிவிசி குழாய்கள், பெட்ரோல் பங்க் அருகே இருந்த ஜெனரேட்டா் எரிந்து நாசமாகியது. பெட்ரோல் பங்க் அருகே எழுந்த தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT