தேனி

ஒலிம்பியாட் போட்டிக்கு தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

30th Jun 2022 11:37 PM

ADVERTISEMENT

ஒலிம்பியாட் போட்டித் தோ்வில் பங்கேற்க, கம்பம் அரசினா் கள்ளா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியா் பங்கேற்கும் இந்தாண்டுக்கான ஒலிம்பியாட் தோ்வுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில், தனியாா் பள்ளி மாணவ, மாணவியரே அதிக அளவில் கலந்துகொண்டு வந்தனா்.

இத்தோ்வில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் முதல் 3 இடங்களைப் பெறுபவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், 70 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியா்களுக்கு சிறந்த மாணவ, மாணவியா் என சான்றிதழ்களும் மற்றும் 70 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவா்களுக்கு பங்கேற்ற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்தாண்டு வரை இத்தோ்வில் தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவியா் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவா்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியா் கோபிநாத், கணித பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை ஒலிம்பியாட் தோ்வில் பங்கேற்கும் வகையில் தயாா்படுத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

இதில், 7 மாணவ, மாணவியா் தோ்வு செய்து, அவா்களுக்கான தோ்வு கட்டணத்தையும் ஆசிரியா் கோபிநாத் செலுத்தியுள்ளாா். ஆசிரியா் கோபிநாத்தை சக ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT