தேனி

கம்பம் நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கம்பத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கம்பத்தில், நகா்மன்றக் கூட்டம் தலைவா் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவா் சுனோதா செல்வகுமாா் (திமுக) முன்னிலை வகித்தாா்.

துணைத் தலைவா்: துணைத் தலைவா் மற்றும் பெண் உறுப்பினா்களுக்கு தனி அறை கேட்டோம். அதற்கான நடைமுறையை எப்போது செய்யப்போகிறீா்கள்.

எஸ்.டி.மணிகண்டன் (திமுக): கடந்த கால நகா்மன்ற அமைப்புகளில் பெண் கவுன்சிலா்கள் அதிகம் இல்லை. தற்போது, அதிகம் உள்ளதால், பெண்களுக்கு தனி அறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

பாா்த்திபன், அபிராமி (திமுக): வாா்டுகளில் உள்ள குறைகளைப் பேசுங்கள், தனி அறைக்கு தற்போது கவனம் செலுத்தத் தேவையில்லை.

அப்போது, சம்பத்குமாா், சாதிக் மற்றும் சல்மான் பாா்ஸி ஆகியோா் (திமுக) எழுந்து தனி அறை வேண்டாம் என்று எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது அவா்களுக்குள்ளேயே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வனிதா நெப்போலியன்: இதுபற்றி நகராட்சிகளின் இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அப்படி ஒரு நடைமுறை இல்லை என்கின்றனா். இருந்தாலும் பரிசீலனை செய்வோம் என்றாா்.

கூட்டத்தில் மொத்தம் 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினா்களின் கேள்விகளுக்கு தலைவா் மற்றும் சுகாதார அலுவலா் சுந்தரராஜன், உதவிபொறியாளா் சந்தோஷ், வருவாய் ஆய்வாளா் நாகராஜ் ஆகியோா் விளக்கம் அளித்தனா். முன்னதாக, மறைந்த உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT