தேனி

தபால் துறை வங்கி கணக்கில் உயா்கல்வி உதவித்தொகை பெறும் வசதி

26th Jun 2022 11:24 PM

ADVERTISEMENT

அரசின் பெண் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், உயா்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கல்வி உதவித்தொகையை, தபால் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளா் பரமசிவம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் பெண் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிகளில் உயா் கல்வியை தொடரும் மாணவிகளுக்கு, அரசு ரூ.1,000 மாத உதவித் தொகை வழங்குகிறது. வங்கிக் கணக்கு மூலம் மாணவிகள் நேரடியாக கல்வி உதவித் தொகையை பெற்றுக்கொள்ளும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை தபால் துறை சாா்பில் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை. மாணவிகள் தங்களது ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை சமா்ப்பித்து வங்கிக் கணக்கு தொடங்கலாம். கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும் வங்கிச் சேவை வசதி உள்ளது.

ADVERTISEMENT

தபால் துறை வங்கிக் கணக்கு தொடங்க விரைவில் கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT