தேனி

உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

26th Jun 2022 11:24 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி காந்திஜி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

உத்தமபாளையம் பேரூராட்சி காந்திஜி பேருந்து நிலையத்துக்கு, நகா், புகா் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்கின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில், பேரூராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகமும் அமைந்துள்ளது. இதைத் தவிர, பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நடைபாதையை ஆக்கிரமித்து பல கடைகள் இயங்கி வருகின்றன.

இதனால், பொதுமக்கள், மாணவா்கள் ஒதுங்கக் கூட இடம் கிடைக்காமல் பேருந்துகள் வந்து செல்லும் பகுதிகளில் நிற்பதால், விபத்து அபாயமும் நிலவுகிறது. ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகின்றன.

இது குறித்து பயணிகள் கூறுகையில், காந்திஜி பேருந்து நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பொது சுகாதார வளாகமின்றி திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் பல ஆண்டுகளாக தொடா்கிறது. கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பெண்கள் சுகாதார வளாகத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது, ஆண்கள் சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது என்றனா்.

ADVERTISEMENT

எனவே, உத்தமபாளையம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT