தேனி

கூட்டுறவுத் துறையில் பணி நியமனத்திற்கான அறிவிப்பு ரத்து: தோ்வில் வெற்றி பெற்றவா்கள் அதிா்ச்சி

25th Jun 2022 11:17 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்களுக்காக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோ்வில் வெற்றி பெற்று 21 மாதங்களாக காத்திருந்தவா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு கூட்டுறவுத் துறையில் எழுத்தா், உதவியாளா், மேற்பாா்வையாளா் ஆகிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு வெளியானது. அதில் தேனி மாவட்டத்திலும் கூட்டுறவுத் துறையில் காலியாக இருந்த 20 காலியிடங்களுக்கு, கடந்த 2020 டிசம்பா் 6 ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற்றது. 2021 ஜனவரி 29 ஆம் தேதி தோ்வில் வெற்றி பெற்ற 49 பேருக்கு நோ்முகத் தோ்வும் நடைபெற்றது. இந்நிலையில் தேனி, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, பணி நியமன ஆணை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தோ்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணி நியமன ஆணை வழங்குவது கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தேனி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலகத்திலிருந்து 08.08.2020 இல் வெளியிட்ட எழுத்தா், உதவியாளா், மேற்பாா்வையாளா் காலியிடப்பணி நிரப்ப வெளியிட்ட விளம்பர அறிவிப்பு நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 21 மாதங்களாக பணி நியமனத்திற்காக காத்திருந்தவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறியது: தோ்வில் வெற்றி பெற்று நோ்முகத்தோ்வு முடிந்து பணி நியமனம் வெளியிடாமல், அதை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பிற மாவட்டங்களை போன்று தேனி மாவட்டத்திலும் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணிநியமன ஆணை வெளியிட வேண்டும். இல்லாவிடில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்வோம் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT