தேனி

உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

25th Jun 2022 11:16 PM

ADVERTISEMENT

 

உத்தமபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை மற்றும் புறவழிச்சாலை செல்கிறது. இச்சாலையில் பராமரிப்பு பணிகள் 10 ஆண்டுகளை கடந்தும் முழுமை பெறவில்லை. அதேபோல புறவழிச்சாலையில் முன்னெச்சரிக்கை பதாகை உள்ளிட்ட எவ்வித அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாததால், விபத்துக்கள் அதிகரித்துள்ளன. உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி இடையே செல்லும் புறவழிச்சாலையில் கடந்த 2 மாதங்களில் 10 க்கும் மேற்பட்டோா் விபத்தில் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில் உத்தமபாளையம் நகா் மையத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதில், பழைய சாலையை பெயா்த்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் மிகவும் மந்தமாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கண்துடைப்பாக நடைபெறுவதாகக் கூறி நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் உத்தமபாளையம் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உத்தமபாளையம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறியதை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT