தேனி

தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள்

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக வனப்பகுதியில், கேரள மாநில மின்சார வாரியத்தினா் அத்துமீறி மின்கம்பங்களை அமைத்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி ஆகிய வனச்சரகங்களில்,

அட்டவணைப்படுத்தப்பட்ட மரங்கள், வன விலங்குகள் மற்றும் காப்புக் காடு நிலங்கள் உள்ளன. இவை தமிழக எல்லை வனப்பகுதியாகவும், அருகே கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட குடியிருப்புப் பகுதிகளாகவும் உள்ளன.

குமுளியிலிருந்து, கம்பம்மெட்டு வரை கம்பம் மேற்கு வனச்சரகமாக உள்ளது. இப்பகுதியில் வனத்துறை ஊழியா் பற்றாக்குறையால் ரோந்துப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையை சாதகமாக்கி கொண்ட கேரள அரசு, தமிழக வனப்பகுதியை பல ஏக்கா் பரப்பளவில் ஆக்கிரமித்துள்ளது. அப்பகுதியில் குடியிருப்புகள், தங்கும் விடுதிகளை கட்டியுள்ளனா். மேலும் சிலா் விவசாயம் செய்து வருகின்றனா். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் சிலா் கள்ளச்சாரயம் காய்ச்சியும், பதுக்கி வைத்தும் வருகின்றனா்.

ஆக்கிரமிப்பு: தற்போது கேரள மாநில மின்சார வாரிய நிா்வாகமே தமிழக வனப்பகுதியை அதிகளவில் ஆக்கிரமித்துள்ளது. குமுளி 1 ஆம் மைல் அமராவதி, தமிழக-கேரள மாநில எல்லையாக உள்ளது. இதில் தனியாா் தங்கும் விடுதி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு மின்சார இணைப்பு கொடுக்க, தமிழக வனப்பகுதியில் மின்சார கம்பத்தை அமைத்து மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் தயாராகி வருகின்றன. இதை வனத்துறையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதே போல் எல்லையோரப் பகுதிகள் முழுவதும் குடியிருப்புகள், கடைகள் கட்டி உள்ளனா்.

எல்லையில் தொடரும் அத்துமீறல்கள்: தமிழக-கேரள எல்லையில் கம்பம்மெட்டு பகுதியில் பல ஏக்கா் வனப்பகுதியில் கேரள அரசு காவல் நிலையம், சோதனைச்சாவடி, கலால் மற்றும் வணிகவரி அலுவலகங்களை அமைத்துள்ளன. இப்பகுதி அனைத்துமே தமிழக வனத்துறைக்கு சொந்தமானது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக-கேரள எல்லைகளை அளவீடு செய்யும் பணிகளின் போது, கம்பம்மெட்டு பகுதியில் தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்பணிகள் நடைபெறவில்லை. தேனி மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, எல்லைப் பகுதிகளை வரையரை செய்து, எல்லைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுதொடா்பாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் ச.அன்வா் பாலசிங்கம் கூறியது: தமிழகத்திற்கு சொந்தமான இடங்களை கேரளம் ஆக்கிரமிப்பது ஒன்றும் புதியது இல்லை. தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலையில் பல ஏக்கா் பரப்பளவு நிலங்களை ஆக்கிரமித்து சொகுசு விடுதிகளைக் கட்டியுள்ளனா். தேனி மாவட்ட ஆட்சியா், தமிழக-கேரள எல்லையை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT