தேனி

கூடலூரில் மின்கம்பங்கள் அகற்றப்படாததால் நான்கு வழிச்சாலைப் பணிகள் தாமதம்

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கூடலூரில் அகற்றப்படாத மின்கம்பங்கள், மின் மாற்றி மற்றும் மரங்களால் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தாமதமாகி வருகின்றன.

கூடலூரில் வடக்குப் பகுதியிருந்து தெற்கு வரை சுமாா் 3 கிலோமீட்டா் தூரத்துக்கு, நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை மாநில நெடுஞ்சாலை துறை செய்து வருகிறது. இந்நிலையில், நான்கு வழிச்சாலை அமையவுள்ள நகராட்சி சாலையின் நடுவே 1 மீட்டா் அகலத்தில் தடுப்புச் சுவரும், அதிலிருந்து இருபுறமும், தலா 16.50 மீட்டா் அகலத்தில் சாலையும் அமைக்கப்பட உள்ளது. அதற்காக சாலையின் இருபுறமும் உள்ள 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 20-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் மின்வாரிய அலுவலகத்திற்கு கடிதம் எழுதி அதற்கான செலவு மதிப்பீடுகளை கேட்டுள்ளனா்.

அதே போல் சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களை அகற்ற கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளனா். ஆனால் இரு தரப்பிலும் எந்தவித பதிலும் இல்லை, ஆனாலும் நெடுஞ்சாலை துறையினா் பணிகளை தொடங்கியுள்ளனா். இப்பணிகள் இடையூறு இல்லாத இடங்களில் வேகமாக நடைபெறுகிறது, மின்மாற்றி, மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களில் பணிகள் நடைபெறவில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT