தேனி

கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விதைத்த நெல் முளைக்காதலால் விவசாயிகள் அதிர்ச்சி

15th Jun 2022 06:11 PM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு  விதைத்த விதை நெல் முளைக்காதலால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விவசாயிகள் விதை நெல்லை வாங்கி நாற்றாங்கால் பயிரிடுவதற்காக விதைத்து வருகின்றனர். நாற்றாங்கால் 7 நாளுக்குள் முளைத்து, அதிலிருந்து 25 நாள்களுக்கு பிறகு நாற்றை எடுத்து வயல்வெளியில் நடுவார்கள்.

இதற்காக விதை நெல் வேளாண்மை துறை மூலமும், தனியார்களும் விற்பனை செய்து வருகின்றனர். நெல் நாற்றாங்கால் நடுவதற்கு விதை நெல் சான்றிதழ் பெற்றுத்தான் விவசாயிகள் வாங்க வேண்டும். வேளாண்மை துறை மூலம் கோ.51 ரக விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: திருப்புவனம் அருகே புலியூர் பாம்பாட்டி சித்தர் கோயிலில் வைகாசி உற்சவ விழா

இந்நிலையில் சுருளிப்பட்டியில் தனியார் மூலம், 509 ரக விதை நெல் விவசாயிகள் சிலர் பெற்று உத்தமுத்து , சுருளிப்பட்டி ஆகிய பாசன பரவுகளில் நாற்றாங்காலுக்காக விதைத்துள்ளனர்.  7 நாள்களாகியும் நாற்றாங்கால் முளைக்கவில்லை. அருகே உள்ள மற்ற நிலங்களில் நாற்றாங்கால் வளர்ந்து வருகிறது. இதனால் தனியாரிடம் விதை நெல் வாங்கியவர்கள் நாற்றாங்கால் முளைக்காதலால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். விதை நெல் விற்றவரை கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுபற்றி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


போலி விதை நெல் பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது: சான்றளிக்கப்பட்ட விதைகளை வேளாண்மை துறை மூலம் வழங்குவதாக அதிகாரிகள் விவசாயிகளுக்கு முறையான தகவல்களை தெரிவிப்பது இல்லை.

இதனால் விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தனி நபரிடம் விதை நெல் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.

வேளாண்மை துறை விவசாயிகளிடையே தகவல் தொடர்பு இல்லாததே இதற்கு காரணம்.  மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT