உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மதுகுடிக்க பணம் தராத மாமாவை கொலை செய்த மருமகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவிந்தன்பட்டி பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மரியதாஸ் (67). கட்டடத் தொழிலாளி. இவரது அக்கா செல்வி மகன் ஜெயக்குமாா் (29). திருமணம் ஆகாத இவா் தினமும் மது குடிப்பாராம். இவா் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மதுகுடிக்க பணம் வேண்டும் எனக்கூறி மரியதாஸிடம் அடிக்கடி தகராறு செய்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை, ஜெயக்குமாா் மது குடிக்க பணம் கேட்டதற்கு மரியதாஸை பேவா் பிளாக் கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மரியதாஸ் உயிரிழந்தாா். இது குறித்து அவரது மகள் ரோஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.