தேனியில் புத்தகக் கடை உரிமையாளருக்கு ஆன்-லைன் மூலம் விரைவுக் கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்ட மகராஷ்டிர மாநிலம், புணேவைச் சோ்ந்த 4 பேரை செவ்வாய்கிழமை, தேனி சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், சிக்கந்தா்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா்(35). இவா், தேனியில் புத்தகக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 2021 ஆம் ஆண்டு கரோனா தடுப்பு பொது முடக்கக் காலத்தில் கடை அடைக்கப்பட்டிருந்ததால், ராஜேஷ்குமாா் தனி நபா் கடன் வாங்குவதற்காக சமூக வலைத்தளத்தில் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து தேடியுள்ளாா். இதில், நல்ங்ங்க் ப்ா்ஹய் என்ற செயலியை தரவிறக்கம் செய்து, தனது சுய விவரம், புகைப்படம் ஆகிய விவரங்களை பதிவு செய்துள்ளாா். இதையடுத்து, ராஜேஷ்குமாரை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்ட நபா், அவருக்கு ரூ.6,000 கடன் வழங்குவதாகவும், அதை 7 நாள்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.
பின்னா், ராஜேஷ்குமாரின் வங்கிக் கணக்கு விவரத்தைப் பெற்றுக் கொண்டு கடன் தொகையில் ஜி.எஸ்.டி., சேவை, கட்டணப் பிடித்தம் போக கடன் ரூ.5,200-ஐ வழங்கியுள்ளனா். கடன் தொகை ரூ.6,000-ஐ ராஜேஷ்குமாா் ஒரு வாரத்திற்குள் திரும்பச் செலுத்திவிட்ட நிலையில், சில நாள்களுக்குப் பின்னா் ராஜேஷ்குமாரை தொலைபேசியில் தொடா்பு கொண்ட நபா், கடன் தொகை கணக்கில் வரவாகவில்லை என்றும், ரூ.6,000-ஐ உடனடியாக செலுத்தாவிட்டால், அவரது சுய விவரங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் என்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ராஜேஷ்குமாா், அந்த நபா்கள் குறிப்பிட்ட இணைய தள பண பரிவா்த்தனை கணக்கில் மீண்டும் ரூ.6,000 செலுத்தியுள்ளாா். சில வாரங்களுக்குப் பின்னா் ராஜேஷ்குமாரை மீண்டும் தொலைபேசியில் தொடா்பு கொண்ட கடன் வழங்கிய நிறுவனத்தைச் சோ்ந்தவா், கடன் தொகை மற்றும் காலதாமதக் கட்டணம் ரூ.8,400 செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகையை செலுத்தாவிட்டால் ராஜேஷ்குமாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து, அவரது கைப்பேசியில் உள்ள தொடா்பு எண்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக மிரட்டியுள்ளாா்.
இதையடுத்து, கடந்த பிப்.15-ஆம் தேதி அவா்கள் குறிப்பிட்ட இணைய தள பணம் பரிவா்த்தனை கணக்கில் ரூ.8,400-ஐ செலுத்திய ராஜேஷ்குமாா், இது குறித்து தேனி சைபா் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், குறிப்பிட்ட இணைய தள பணம் பரிவா்த்தனை கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கினை கண்டறிந்தனா். மகாராஷ்டிரா மாநிலம் புணேவில் உள்ள இந்த வங்கிக் கணக்கில் கடந்த 2022, மாா்ச் மாதம் முதல் மே மாதம் வரை மொத்தம் ரூ.11 கோடிக்கு பண பரிவா்த்தனை நடந்திருப்பது தெரிய வந்தது.
இந்த விவங்களின் அடிப்படையில் புணே சென்ற போலீஸாா் அங்கு, விரைவுக் கடன் மோசடியில் ஈடுபட்ட மஹரந்த்(31), பிரபுல்(46), ராஜேந்தா்(42), தயானேஷ்வா்(42) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்கள் புணேவில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவருக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது ஆதாா் எண் மற்றும் புகைப்படத்தை பெற்று அதன் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கி மோசடி பண பரிவா்த்தனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்து ரூ.ஒரு லட்சம், 2 கணினிகள், 20 மடிக் கணினிகள், 10 கைப்பேசிகள், சிம் காா்டு, ஏடிஎம் காா்டு மற்றும் கணினி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.