போடியில் பழைய இரும்புக் கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
போடி கிருஷ்ணா நகரில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருபவா் சின்னமுத்து. இவா், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்ட நிலையில், நள்ளிரவில் கடைக்குள் தீப்பிடித்து கரும்புகை பரவியுள்ளது.
இதைக்கண்ட அப்பகுதியினா், போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், போடி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இதில், கடையிலிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பழைய இரும்பு பொருள்கள் எரிந்து சேதமடைந்துவிட்டன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.