தேனி

கூடலூரில் பழைமையான ஈஸ்வரன் கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்த முடிவு

7th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கூடலூரில் சிதிலமடைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஈஸ்வரன் கோயிலை கையகப்படுத்தி கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

கூடலூரிலிருந்து தாமரைக்குளம் செல்லும் வழியில் 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. 1446 ஆம் ஆண்டில், கேரள மன்னா் பூஞ்ஞாற்று தம்புரான் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டு, மானியமாக நிலங்களும், நீா் பாசனத்துக்கு தாமரைக்குளமும் வெட்டப்பட்டுள்ளது.

தற்போது, மிகவும் சிதிலமடைந்துள்ள இக்கோயிலை, இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி, புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என, கூடலூா் இந்து முன்னணி அமைப்பினா் கோரிக்கை மனு அளித்தனா்.

அதன்பேரில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் லெ. கலையழகன் உத்தரவின்பேரில், ஆய்வாளா் மற்றும் அலுவலா்கள் கூடலூா் ஈஸ்வரன் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, ஈஸ்வரன் கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகிறது என்றும், இதற்கு ஆட்சேபணை தெரிவிப்பவா்கள் தேனியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் ஆட்சேபணை மனு அளிக்கலாம் என்றும் அறிவித்து, முக்கிய இடங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனா்.

இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பால், கூடலூா் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும், இக்கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் எனவும் கோரியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT