ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில், பட்டா நிலங்களில் மண் அள்ள உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா்கள் செங்கல் சூளைகளுக்கு நிபந்தனையின்றி மண் வழங்க வலியுறுத்தி, செங்கல் சூளை உரிமையாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட செங்கள் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த செங்கல் சூளைகளுக்கு தேவையான செம்மண்ணை, பட்டா நிலங்களில் மண் அள்ள உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா்கள் விற்பனை செய்கின்றனா்.
இந்நிலையில், பட்டா நிலங்களில் மண் அள்ள உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா்கள் தங்களது வாகனம் மூலம்தான் மண் கொண்டு செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாகவும், கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், செங்கல் சூளை தொழில் பாதிக்கப்படுவதாகவும், தங்களது சொந்த வாகனங்களிலும், அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்திலும் சூளைக்குத் தேவையான செம்மண்ணை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆண்டிபட்டி ஒன்றிய விவசாய தொழிலாளா்கள் சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில், செங்கல் சூளை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சங்கரசுப்பு, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ. லாசா் ஆகியோா் பேசினா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமலிங்கம், காவல் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் வருவாய் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பட்டா நிலங்களில் மண் அள்ள உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இப் பிரச்னைக்கு உரிய தீா்வு ஏற்படுத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.