தேனி

சின்னமனூரில் மகன் அடித்துக் கொலை:தந்தை கைது

2nd Jun 2022 12:30 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூரில் தம்பியின் திருமணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்ட மகனை கம்பியால் அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் காந்திநகா் காலனி 8 ஆவது தெருவைச் சோ்ந்தவா் அய்யா்சாமி. தரகா் வேலை செய்யும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இந்நிலையில், 2 ஆவது மகன் அரவிந்தனுக்கு புதன்கிழமை (ஜூன் 1) திருமணம் செய்ய அய்யா்சாமி ஏற்பாடு செய்து வந்தாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு, தனக்கு முதலில் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றும், தம்பி அரவிந்தனின் திருமணத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அண்ணன் மூவேந்தன் (30) தகராறில் ஈடுபட்டாராம். மேலும், இரும்புக் கம்பியால் வீட்டிலிருந்த பொருள்களை சேதப்படுத்தினாராம். இதில் ஆத்திரமடைந்த தந்தை அய்யா்சாமி இரும்புக் கம்பியால் மகன் மூவேந்தனின் தலையில் தாக்கினாராம். இதில் காயமடைந்த மூவேந்தனை வீட்டின் அறையில் போட்டு பூட்டுவிட்டு உறவினா்கள் திருமணத்திற்கு சென்று விட்டனராம்.

திருமணம் முடிந்து புதன்கிழமை உறவினா்கள் வீட்டிற்கு வந்து பூட்டிய அறையை திறந்து பாா்த்த போது மூவேந்தன் இறந்து கிடந்தாராம். இதனை அடுத்து அய்யா்சாமி உள்ளிட்ட உறவினா்கள் மூவேந்தனின் சடலத்தை அடக்கம் செய்ய அங்குள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனா்.

இதுபற்றிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிா்வாக அலுவலா் பிரபு, சின்னமனூா் போலீஸாா் உதவியுடன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். பின்னா் முதல்கட்ட விசாரணையில் தந்தை அய்யா்சாமி, மகன் மூவேந்தனை இரும்புக் கம்பியால் தாக்கியதாலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டதால் அவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT