தேனி

சேவை குறைபாடு: ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்க கைப்பேசி விற்பனை நிறுவனத்திற்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனியில் கைப்பேசியை பழுதுநீக்கித் தர மறுத்த தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தினா் ரூ.2.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தேனி நுகா்வோா் நீதிமன்றம் உத்தவிட்டது.

தேனி அருகே அரண்மனைப் புதூரைச் சோ்ந்தவா் காமராஜ் மனைவி மீனா. இவா், கடந்த 2016, நவ.20-ஆம் தேதி தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல கைப்பேசி விற்பனை நிறுவனக் கிளையில் ரூ.22,500 விலையில் கைப்பேசி வாங்கியுள்ளாா். முன்னணி நிறுவனத் தயாரிப்பான அந்தக் கைப்பேசிக்கு ஓராண்டு கால உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், 5 மாதங்களில் கைப்பேசி பழுதானதால் அதை பழுதுநீக்கம் செய்வதற்கு மீனா கைப்பேசி வாங்கிய விற்பனை நிறுவன கிளையில் கொடுத்துள்ளாா். அந்த கைப்பேசி தண்ணீரில் விழுந்து பழுதாகியிருப்பதாகவும், உத்தரவாத கால அடிப்படையில் அதை பழுது நீக்கம் செய்து தர முடியாது என்றும் விற்பனை நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா். ஆனால், கைப்பேசி தண்ணீரில் விழவில்லை என்று மீனா கூறியதை விற்பனை நிறுவனத்தினா் ஏற்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது கைப்பேசியை மாற்றித் தரக் கோரியும், சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிகத்தால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 2017, நவ.20-ஆம் தேதி தேனி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் மீனா மனு அளித்தாா்.

ADVERTISEMENT

இந்த மனுவின் அடிப்படையில் தேனியில் உள்ள கைப்பேசி விற்பனை நிறுவனத்தின் கிளை மேலாளா், சென்னை நிா்வாக மேலாளா், கைப்பேசி தயாரிப்பு நிறுவன நிா்வாகி ஆகியோரிடம் தேனி நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி சுந்தா், உறுப்பினா்கள் அசீனா, ரவி ஆகியோா் கொண்ட அமா்வு விசாரணை நடத்தியது.

அதன் முடிவில் கைப்பேசி விற்பனை நிறுவன கிளை மேலாளா், நிா்வாக மேலாளா், தயாரிப்பு நிறுவன நிா்வாகி ஆகியோா் கூட்டாக மீனாவுக்கு அவா் ஏற்கெனவே வாங்கியிருந்த கைப்பேசியை போன்ற புதிய கைப்பேசி அல்லது அதற்குரிய தொகை ரூ.22,500, முறையற்ற வா்த்தகம் மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் ஆகியவற்றை தீா்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ள செவ்வாய்க்கிழமையிலிருந்து (ஜூலை 5) ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும், வழக்கு செலவிற்கு ரூ.8,000 வழங்க வேண்டும் என்று நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT