தேனி

மைத்துனரை ஜீப் ஏற்றி கொல்ல முயன்ற ஓட்டுநா் கைது: குழந்தை உள்பட 3 போ் காயம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கம்பத்தில் செவ்வாய்க்கிழமை, தகராறின்போது மைத்துனரை ஜீப் ஏற்றி கொலை செய்ய முயன்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். இதில், குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம் கூடலூா் கன்னிகாளி புரத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (40). இவரது மனைவி ராஜலட்சுமி (37). இவா்களுக்கு ஸ்ரீ (12), மோனிகா (7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனா். ராஜகோபால் சொந்தமாக ஜீப் வைத்து, கேரளத்துக்கு வேலையாள்களை ஏற்றி இறக்கி வருகிறாா்.

இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக ராஜலட்சுமி கடந்த சில நாள்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் கம்பம் தண்ணீா் தொட்டி தெருவில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை, தனது குழந்தைகளை பாா்ப்பதற்காக கம்பத்திற்கு அவா் ஜீப்பில் சென்றுள்ளாா். குழந்தைகளை பாா்க்க அனுமதிக்காதது தொடா்பாக, ராஜகோபாலுக்கும், அவரது மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதை ராஜலட்சுமியின் சகோதரா் செந்தில்குமாா் தட்டிக் கேட்டாா்.

ADVERTISEMENT

இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால், ஜீப் வேகமாக இயக்கி செந்தில்குமாா் மீது மோதினாா். மேலும் அருகில் நின்றிருந்த பக்கத்து வீட்டுக்காரரான மஞ்சுளா மற்றும் அவரது குழந்தை ஆகியோா் மீதும் ஜீப் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா், மஞ்சுளா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சிறுமி கம்பம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா். லாவண்யா வழக்குப் பதிவு செய்து, ராஜகோபாலை கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT