தேனி

வைகை ஆற்றில் குதித்த பெண்ணை தேட அணையில் தண்ணீா் திறப்பு நிறுத்தம்

2nd Jul 2022 11:00 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், வைகை அணை அருகே ஆற்றில் குதித்த பெண்ணைத் தேடுவதற்காக சனிக்கிழமை, அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது.

உசிலம்பட்டி அருகே குறுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சஞ்சீவ்குமாா் மனைவி சித்ரா (45). இவா், வைகை அணை குருவியம்மாள்புரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளாா். இந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற சித்ரா, வீட்டிற்கு திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வைகை அணை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைகை அணையின் நீரேற்று அணை அருகே உள்ள பாலத்திலிருந்து, வைகை ஆற்றில் பெண் ஒருவா் குதித்து தண்ணீரில் மூழ்கியதாக அப்பகுதியிலிருந்தவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா். ஆற்றுப் பாலத்தின் அருகே கிடந்த காலணி சித்ராவுக்கு சொந்தமானது என்று அவரது உறவினா்கள் உறுதிப்படுத்தினா். இதையடுத்து, ஆண்டிபட்டி, பெரியகுளம் தீயணைப்பு மீட்புத் துறையினா் மற்றும் போலீஸாா் வைகை ஆற்று பாலத்திலிருந்து நீரேற்று அணை வரை வைகை ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுகல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டிருந்ததால் ஆற்றில் நீரோட்டம் அதிகளவில் இருந்தது. தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டதால், அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. பின்னா், வைகை ஆற்றுப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT