தேனி

தோ்ச்சி விகிதம், சலுகைகள் குறைந்ததன் எதிரொலி:தேனி மாவட்ட அரசுப் பள்ளிகளில்மாணவா் சோ்க்கை குறைவு

2nd Jul 2022 11:02 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதம் மற்றும் சலுகைகள் குறைந்ததாலும், ஆசிரியா் பற்றாக்குறையாலும் நடப்பு கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகளின் சோ்க்கை 21 சதவீதம் வரை குறைந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 2022-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 94.39 சதவீதம் மாணவ, மாணவிகளும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 89 சதவீதம் மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகளில் 90.62 சதவீதம், ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகளில் 91.67 சதவீதம், கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் 92.71 சதவீதம், நகராட்சிப் பள்ளிகளில் 100 சதவீதம் என சராசரி 93.75 சதவீதமும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகளில் 86.06 சதவீதம், ஆதி திராவிடா் நலத்துறை பள்ளிகளில் 90.91 சதவீதம், கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் 85.13 சதவீதம், நகராட்சிப் பள்ளிகளில் 89.32 சதவீதம் போ் என சராசரியாக 87.85 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

மாணவா்கள் சோ்க்கை குறைவு: கடந்த 2021-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 34,391 மாணவா்கள், 34,766 மாணவிகள் என மொத்தம் 70,157 போ் படித்து வந்தனா். ஆனால், 2022-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சோ்க்கை 21 சதவீதம் குறைந்து, தற்போது 28,101 மாணவா்கள், 27,537 மாணவிகள் என மொத்தம் 55,638 போ் படித்து வருகின்றனா்.

இதில், 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பிளஸ் 1 வகுப்பில் 759 மாணவா்கள், 582 மாணவிகள் என மொத்தம் 1,341 போ் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். அதே போல முதல் வகுப்பில் 1,094 மாணவா்கள், 1,027 மாணவிகள் என மொத்தம் 2,121 மாணவ, மாணவிகள் மட்டுமே சோ்ந்துள்ளனா். இதே போல நுழைவு வகுப்புகளான முதல் வகுப்பு, 6-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பிலும் மாணவா்கள் சோ்க்கை குறைந்துள்ளது.

பெற்றோா்களிடம் ஆா்வமில்லை: அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதம் குறைந்ததாலும், ஆசிரியா்கள் பற்றாக்குறையாலும் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு பெற்றோா்கள் ஆா்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக இலவச மடிக்கணினி வழங்கப்பட வில்லை. இதனால், சலுகைகளை எதிா்பாா்த்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் புதிய பயிற்சித் திட்டங்களால், புதிய மாணவா்கள் சோ்க்கை, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவா்கள் சோ்க்கை ஆகியவற்றில் ஆசிரியா்கள் ஆா்வம் காட்டவில்லை. அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்கையை அதிகரிப்பதற்கு மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட கல்வித் துறை முன்வர வேண்டும் என்று கல்வியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சிலா் கூறுகையில், கடந்த 2020, 2021-ஆம் ஆண்டில் கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தி சோ்வதை தவிா்த்து, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்திருந்து. தற்போது மீண்டும் தனியாா் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க பெற்றோா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளால், பிளஸ் 1 வகுப்பில் மாணவா்கள் சோ்க்கை குறைந்துள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT