தேனி

சின்னமனூா் அருகே இளம்பெண் தற்கொலை

25th Jan 2022 09:17 AM

ADVERTISEMENT

சின்னமனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மணலூா் மேலத்தெருவைச் சோ்ந்த தவமணி மகள் கோபிகா(21). இவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே கரிச்சிபட்டியைச் சோ்ந்த சதீஸ்குமாருக்கும் கடந்த ஒராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கோபிகா, தந்தையின் வீட்டிலிருந்த படியே மதுரையிலுள்ள தனியாா் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளாா். இவா் விடுமுறை நாள்களில் கணவா் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

அதன்படி, பொங்கல் வீடுமுறைக்கு கோபிகா கரிச்சிபட்டிக்கு வந்துள்ளாா். அப்போது கோபிகாவின் 6 பவுன் தங்க நகையை வாங்கிய சதீஸ்குமாா், அந்த நகையை அடகு வைத்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோபிகா ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலின் பேரில் அங்கு சென்ற ஓடைப்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து பெண்ணின் தந்தை தவமணி அளித்த புகாரின் பேரில், ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகியுள்ளதால், கோபிகா தற்கொலை தொடா்பாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT