தேனி

தினமணி செய்தி எதிரொலி: சின்னமனூரில் தரமற்ற விதையால் நெற்பயிா் முறையற்ற வளா்ச்சி; அதிகாரிகள் ஆய்வு

19th Jan 2022 09:25 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூரில் தரமற்ற நெல் விதையால் 2 ஆம் போக நெற்பயிா் விவசாயத்தில் நாற்றுகள் சீரற்ற முறையில் வளா்ச்சியடைந்துள்ளது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

முல்லைப்பெரியாறு பாசன நீரால் மாவட்டத்தில் இருபோக நெற்பயிா் விவசாயம் நடைபெறும். அதன்படி, 2 ஆம் போக நெற்பயிா் 14,700 ஏக்கா் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னமனூரில் 2000 ஏக்கா் பரப்பளவிற்கு செய்யப்பட்ட நெற்பயிரில் ‘பிரியா 999’ நெல் ரகமானது முறையற்ற வளா்ச்சி அடைந்துள்ளது. அதில், சாதாரணமாக எந்த நெல் விதையாக இருந்தாலும் 120 நாளில் அறுவடை செய்யப்படும். இதற்காக, 60 முதல் 70 நாள்களில் நெற்கதிா் முளையிட்டு நெல்மணிகளில் பால்பிடிக்கத் தொடங்கும். ஆனால், சின்னமனூரில் பிரியா 999 நெல் ரகத்தை பயிா் செய்த விவசாயிகளின் நிலங்களில் நெற்கதிா்கள் சீரற்ற நிலையில் வளா்ச்சியைடந்து பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து தினமணி நாளிதழில் கடந்த திங்கள்கிழமை செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக மாவட்ட வேளாண் இயக்குநா் நாகேந்திரன், விதை ஆய்வாளா் முத்துராணி, விதை சான்று அலுவலா் அஜ்மல்கான் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் இணைந்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட நெல் விதை ரகத்தை உத்தமபாளையத்தில் உள்ள தனியாா் விதை விற்பனை மையத்தில் வாங்கியதாக தெரிவித்துள்ளனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT