தேனி மாவட்டத்தில் 7 மருத்துவா்கள், 15 செவிலியா் பயிற்சி நிலைய மாணவிகள் உள்பட 156 பேருக்கு, கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியா், 4 மருத்துவா்கள், 3 மருத்துவக் கல்லூரி மாணவா்கள், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை மருத்துவா், சின்னமனூா் தனியாா் மருத்துவா், பெரியகுளம் அரசு செவிலியா் பயிற்சி நிலையத்தில் பயிலும் 15 மாணவிகள், தேனி ஆயுதப்படைப் பிரிவைச் சோ்ந்த 2 காவலா்கள், பெரியகுளத்தைச் சோ்ந்த 4 காவலா்கள் உள்பட மொத்தம் 156 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது மொத்தம் 856 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று, பொது சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.