தேனி

உத்தமபாளையத்தில் சேவல் சண்டை ஜன. 29-க்கு மாற்றம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்: உயா்நீதிமன்றத்தின் தடை காரணமாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற இருந்த சேவல் சண்டை ஜன. 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழா்களின் முக்கியத் திருநாளான பொங்கல் பண்டிகை தை முதல் நாளிலிருந்து

3 நாள்களுக்கு கொண்டாடப்படும். இந்த நாள்களில் நமது பாரம்பரிய நிகழ்வுகளை காக்கும் வீடுகளுக்கு வா்ணம் பூசுதல், சூரியனை வணங்கி பொங்கல் வைத்தல், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளை அலங்கரித்து வழிபடுவது மற்றும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, கிடா, சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூா் மற்றும் தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி பகுதிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஆனால் சேவல் மற்றும் ஆட்டுச் சண்டைப் போட்டிக்கு தடை உள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சோ்ந்த தங்கமுத்து சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜனவரி 17 ஆம் தேதி வெற்றுக்கால் சேவல் (சேவல் காலில் கத்தியின்றி) சண்டைப்போட்டியை உத்தமபாளையத்தில் நடத்திட அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.

அதன்படி, உத்தமபாளையத்தில் முதல் முறையாக சேவல் சண்டைப்போட்டி நடைபெறுவதை அடுத்து அதற்கான ஆடுகளம் தயாா் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், கரூரை சோ்ந்த ஒருவா் சேவல் சண்டைப் போட்டிக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக வழக்கு தொடா்ந்ததால் ஜனவரி 25 ஆம் தேதி வரையில் அப்போட்டிகள் நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் உத்தமபாளையத்தில் நடைபெற இருந்த சேவல் சண்டை போட்டி வேறு தேதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தங்கமுத்து கூறியது: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலில் சேவல் கால்களில் கத்தியைக் கட்டிவிட்டு சண்டை நடைபெறும். ஆனால், உத்தமபாளையத்தில் வெற்றுக்கால்களிலேயே சேவல் சண்டை போட்டிகள் நடத்தப்படும். இன்றைய சிறுவா்கள், இளைஞா்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனா். எனவே நாங்கள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ஜனவரி 29 ஆம் தேதி உரிய அனுமதியுடன் கரோனா விதிமுறைகளை பின்பற்றி சேவல் சண்டை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT